
திருச்சி உறையூர் குறத்தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஒரு அறையில் இருந்து நேற்று காலை சரக்கு ஆட்டோ மற்றும் வாகனங்களில் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படம் பொறிக்கப்பட்ட புத்தகப்பைகள், ஜியாமெட்ரி பாக்ஸ் மற்றும் கலர் பென்சில்கள் மூட்டை, மூட்டையாக ஏற்றப்பட்டன.
அப்போது தி.மு.க.வினர் அங்கு வந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் அந்த பைகளை வெளியில் எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது எனக்கூறி தடுத்து நிறுத்தினார்கள். அப்போது பள்ளி தரப்பில், இந்த நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியாக மாற்றப்படுகிறது. வாக்குச்சாவடி அமைப்பதற்கு இந்த பைகள் மற்றும் பொருட்கள் இடையூறாக இருந்ததால் அவற்றை நகரின் மற்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வருகிறோம்.
மற்றபடி மாணவர்களுக்கு இப்போது வழங்குவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்கள். ஆனால் தி.மு.க.வினர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் உறையூர் போலீசார் வந்து புத்தகப்பைகளை கைப்பற்றி பள்ளியில் உள்ள ஒரு அறையில் வைத்து சீல் வைத்தனர்.
அதேபோல் புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த ஜியாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களும் தனித்தனி அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.