“உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? சாப்பாடு எப்படி ஜீரணிக்கிறது?” – அசிங்கப்பட்ட நடிகர்..

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்களை திரும்ப பெறவேண்டும் என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் கடந்த 100 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்கள் தாங்களாகவே கலைந்து செல்வார்கள் என்று கருதி இப்போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் தாங்களாகவே கலைந்து சென்றதுபோல் இதிலும் நடக்கும் என்று மத்திய அரசு கருதிக்கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வெளிநாட்டு பாப் பாடகி ரியான்னா ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டு இருந்தார். அவரது கருத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

அதோடு மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நடிகர் அக்‌ஷய் குமார், கரண் ஜோஹர், சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர், அஜய் தேவ்கன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தனர். பா.ஜ.க.வின் நிர்ப்பந்தம் காரணமாகவே இவர்கள் சமூக வலைத்தளத்தில் இதனை பதிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இக்குற்றச்சாட்டு குறித்து மகாராஷ்டிரா அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று அஜய் தேவ்கன் மும்பையில் கொரேகாவுனில் (Goregaon) உள்ள ஃபிலிம் சிட்டிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வந்ததால் கார் மிகவும் மெதுவாக சென்றது. அதே வழியாக ராஜ்தீப் சிங் என்ற பஞ்சாப்காரர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அருகில் உள்ள காரில் அஜய் தேவ்கன் இருப்பதை கவனித்த ராஜ்தீப் சிங் உடனே ஆட்டோவில் இருந்து இறங்கி அஜய் தேவ்கன் கார் முன்பு நின்று கொண்டு அஜய் தேவ்கனை காரில் இருந்து வெளியில் வரும்படி கேட்டார். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அஜய் தேவ்கன் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்றும், அது குறித்து பேச வெளியில் வரும்படியும் ராஜ்தீப் சத்தமிட்டார்.

“பஞ்சாப் இவருக்கு சாப்பாடு போடுகிறது. ஆனால் இவர் விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறார். சாப்பாடு எப்படி ஜீரணிக்கிறது. உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? ஏன் காரில் இருந்து வெளியில் வர மறுக்கிறீர்கள்?” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டேயிருந்தார் ராஜ்தீப். அந்நேரம் அஜய்தேவ்கனின் பாதுகாவலர் வந்து ராஜ்தீப்பை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார். ஆனால் அங்கிருந்து நகராமல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ராஜ்தீப். இதையடுத்து இது குறித்து அஜய் தேவ்கன் பாதுகாவலர் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்தீப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் கொரேகவுன் பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் பெருமளவில் கூடிவிட்டனர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x