லாரி வாடகை திடீர் உயர்வு எதிரொலி : காய்கறிகள் விலையேற்றம்?
டீசல் விலையேற்றத்தால் லாரிகள் வாடகை உயர்ந்துள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை மாதவரத்தில் நடந்தது.
கூட்டத்தில் லாரிகளுக்கு தற்போதுள்ள வாடகை தொகையில் இருந்து 30 சதவீதம் உயர்த்தி வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ‘டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். பழைய வாகனங்கள் அழிப்பு 15 ஆண்டுகள் என்பதை 20 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்’ உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த வாடகை உயர்வு, நேற்று நள்ளிரவில் அமலுக்கு வந்தது. லாரி வாடகை உயர்வு காரணமாக காய்கறி, மளிகை பொருட்கள் உள்பட மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.