ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததில் 38 பேர் பலி..

மியான்மரில் புதன்கிழமை பல நகரங்களில் ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

மியான்மரில் இது ஒரு வன்முறை தினம் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. காவல்துறையினரும், ராணுவத்தினரும் முதலில் சிறிய அளவில் எச்சரித்தத்தையடுத்து, துப்பாக்கியால் மக்களை சரமாரியாக சுடத்தொடங்கியது என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

“இது கொடூரமானது. திட்டமிட்ட படுகொலை. எந்த வார்த்தைகளாலும் இந்த நிலைமையையோ, எங்கள் உணர்வுகளை விவரிக்க முடியாது” என சமூக ஆர்வலர் தின்சார் ஷுன்லீ மெசேஜிங் செயலி மூலம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிச்சூட்டில் இறந்த 38 பேரில் 4 குழந்தைகளும் இருந்தனர் எனவும், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“பிப்ரவரி 1 ஆம் தேதி ஆட்சி கவிழ்ப்பு நடந்ததிலிருந்து, இன்றுதான் மோசமான ரத்தக்களரி தினம். இன்று மட்டும் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆட்சிக் கவிழ்ப்பு தொடங்கியதில் இருந்து இப்போது வரை மொத்தம் 50-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்” என்று மியான்மர் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதர் கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர் தெரிவித்துள்ளார்.

ஆளும் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாக கருத்து கேட்க முயன்றபோது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

மியான்மரின் துணை ராணுவத் தலைவர் சூவின் உடன் ஷ்ரானர் புர்கெனர் உரையாடியுள்ளார். அப்போது அவர், “ஆட்சி கவிழ்ப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மற்ற நாடுகளிலிருந்து உங்கள் ராணுவம் வலுவான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று அவர் எச்சரித்திருந்தார்.

அதற்கு அந்த ராணுவத் தலைவர், “நாங்கள் பொருளாதாரத் தடைகளுக்குப் பழகிவிட்டோம்” என்று பதிலளித்துள்ளார். மேலும் நீங்கள் தனிமைப்படுத்தபடுவீர்கள் என்று ஷ்ரானர் எச்சரித்தபோது, `நாங்கள், எங்களுக்கு நெருக்கமான சில நண்பர்களுடன் இருக்க கற்றுக்கொண்டுவிட்டோம்” என்ற பதிலளித்துள்ளார். மியான்மரில் நிலவும் இந்த நிலை குறித்து ஐ.நா. பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை விவாதிக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டேன். நான் அப்படியே தரையில் படுத்துக்கொண்டேன். அவர்கள் சுட்டுக் கொண்டேயிருந்தார்கள்” என்று போராட்டக்காரர் காங் பை சோன் துன் நடந்ததை விவரித்துள்ளார்.

வாஷிங்டனில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், “மியான்மரில் தொடரும் வன்முறையால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது” என்றார். அதிபர் ஜோ பிடனின் நிர்வாகம், மியான்மர் ராணுவத்தை குறிவைக்கும் “பொருத்தமான” நடவடிக்கைகளை மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிராயுதபாணியான பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகங்கள் மீதான அடக்குமுறையை ராணுவம் முடுக்கிவிட்டு வருவதாகவும், ஊடகவியலாளர்கள் கைது அதிகரித்து வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

யாங்கோன் நகரத்தில் போராட்டங்களை ஒடுக்கிய பாதுகாப்பு படையினர், 300 போராட்டக்காரர்களை கைது செய்துள்ளதாக மியான்மர் நவ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இளைஞர்கள் தலையில் கை வைத்தபடி, ராணுவ லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

மாண்டலேயில் சுட்டுக் கொல்லப்பட்ட 19 வயது இளம்பெண் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் “எல்லாம் சரியாகிவிடும்” (Everything will be OK) என்று எழுதப்பட்டிருந்தது.

உயிரிழந்தவர்களின் தியாகங்கள் வீணாகாது என்று சமூக ஆர்வலர் எஸ்தர் ஸீ நாவ் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். “நாங்கள் இதை வென்று வெற்றி பெறுவோம்” என்றும் அவர் கூறினார். எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒற்றை நம்பிக்கையில் இருக்கின்றனர் மியான்மர் மக்கள்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x