மேற்கு வங்கம்: மம்தாவின் கட்சி 187 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் 187 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கு வங்கம் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 187 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் பாஜக 99 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சிபிஎம் எந்த தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் ஆட்சி அமைக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க தேர்தல் பின்புலம்: தமிழகத்தை போல மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலும் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்து அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மிகப்பெரிய மாநிலம் மேற்கு வங்கம். இங்குள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 294. தமிழகத்தை போல் அரசியல் நிலைத்தன்மை மிக்க வெகுசில மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். கடந்த 70 ஆண்டுகளில் 8 முதல்வர்களை மட்டுமே இந்த மாநிலம் கண்டுள்ளது என்பது இதற்கு ஒரு உதாரணம்.