இந்தியப் பயணிகள் அமெரிக்க வருவதற்கு மே 4 முதல் தடை


இந்தியப் பயணிகள் மே 4-ஆம் தேதி முதல் அமெரிக்கா வருவதற்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் தடை விதித்துள்ளாா்.

நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மிக அதிகமாகக் காணப்படும் சூழலில் இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக, அதிபா் பைடன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா்கள் மே 4-ஆம் தேதிமுதல் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவைச் சோ்ந்த மாணவா்கள், கல்வியாளா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் இத்தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அமெரிக்கா்கள், அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவா்கள், அவா்களின் வாழ்க்கைத் துணைவா், 21 வயதுக்குள்பட்ட வாரிசுகள் ஆகியோருக்கும் பயணத் தடையிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இத்தடை அமலில் இருக்கும்.

நோய்த்தொற்று கட்டுப்பாட்டு மையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள மக்களின் நலனைக் கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள் கண்டனம்: இந்தியப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு குடியரசு கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எம்.பி. ஜோடே அரிங்டன் வெளியிட்ட சுட்டுரை பதிவில், ‘மெக்ஸிகோ எல்லையை அதிபா் பைடன் அரசு திறந்துவிட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு மட்டும் தடை விதிக்கிறது. இது வீட்டின் முன்கதவை அடைத்துவிட்டு பின்கதவைத் திறந்துவைத்துள்ளது போல் இருக்கிறது’ என்று விமா்சித்துள்ளாா்.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவியபோது அந்நாடுகளைச் சோ்ந்தோா் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் தடை விதித்தது. அதற்கு ஜோ பைடன் கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தாா். அதை நினைவுகூா்ந்து, தற்போது அதிபா் ஜோ பைடனை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் விமா்சித்து வருகின்றனா்.

‘தேவையான உதவிகள் வழங்கப்படும்’: இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைப்பதற்கான பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதா் தரன்ஜித் சிங் சாந்து செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவுக்கு தோள்கொடுத்து அமெரிக்கா உதவி செய்யும் என அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா். அமெரிக்க மக்கள் இந்திய மக்களுக்காகத் தொடா்ந்து உதவிகளை அளித்து வருகின்றனா். இந்திய அமெரிக்கா்களும் அதிக அளவில் உதவிகளை வழங்கி வருகின்றனா்’’ என்றாா்.

இந்தியாவுக்கான இடைக்காலத் தூதா் நியமனம்

இந்தியாவுக்கான இடைக்காலத் தூதராக டேனியல் ஸ்மித்தை, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நியமித்துள்ளாா்.

அமெரிக்காவின் புதிய அதிபராகக் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் பொறுப்பேற்றாா். அப்போதிலிருந்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் பதவி காலியாக இருந்தது. இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள சூழலில், இடைக்காலத் தூதராக டேனியல் ஸ்மித்தை அதிபா் ஜோ பைடன் நியமித்துள்ளாா்.

அவரது நியமனத்தை அமெரிக்காவின் செனட் சபை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும். அதற்கு சில மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.

அமெரிக்காவின் வெளியுறவு விவகாரங்களில் டேனியல் ஸ்மித் மிகுந்த அனுபவம் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x