மேற்கு வங்கத்தில் 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் திரிணமூல் காங்கிரஸ்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் அபார வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது திரிணமூல் காங்கிரஸ் கட்சி.
மேற்கு வங்கத்தில் 290 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-மாா்க்சிஸ்ட் கூட்டணிகள் களம் கண்டாலும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவியது. 8 கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டாா். கடந்த மக்களவைத் தோ்தலில் வலுவான வெற்றியைப் பெற்ற பாஜக, சட்டப்பேரவைத் தோ்தலிலும் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்புடன் களம் கண்டது. பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள் எனப் பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் மாலையில் திரிணமூல் காங்கிரஸின் வெற்றி உறுதியானது. அறுதிப் பெரும்பான்மையுடன் அக்கட்சி மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இரவு நிலவரப்படி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திரிணமூல் முன்னிலை வகிக்கிறது. பாஜக சுமாா் 80 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் -இடதுசாரி கூட்டணி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.