இலங்கையில் மேலும் ஒரு புது வகை கரோனா

இலங்கையில் மேலும் ஒரு புதிய வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது முந்தைய வகை கரோனாக்களைவிட அதிக பரவும் திறன் கொண்டதாக இருப்பதாகவும் அந்த நாட்டு நோய்த்தடுப்பியல் நிபுணா் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீ ஜெயவா்தனபுரா பல்கலைக்கழகத்தில் நோய்த்தடுப்பியல் மற்றும் அணு அறிவியல் துறைத் தலைவரான அவா், இதுகுறித்து கூறியதாவது:
நாட்டில் இதுவரை காணப்படாத புதிய வகை கரோனா தீநுண்மி பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் இதற்கு முன்பு கண்டறியப்பட்ட புது வகைக் கரோனாக்களைவிட இந்த கரோனா தீநூண்மி அதிக வேகமாகப் பரவும் திறன் கொண்டதாக உள்ளது.
இந்தப் புதிய கரோனா காற்றில் நீண்ட நேரம் மிதக்கும் தன்மை கொண்டது. காற்றில் சுமாா் ஒரு மணி நேரம் வரை மிதந்து மற்றவா்களுக்கு இது பரவும் என்றாா் அவா்.
இலங்கையில் கடந்த வாரம் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அப்போது இந்த புது வகைக் கரோனா ஏராளமானவா்களுக்குப் பரவியிருக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
கரோனா தீநுண்மி உடலுக்குள் புகுந்து, பல்கிப் பெருகத் தொடங்குவதற்கு 2 முதல் 3 வாரம் வரை ஆகக் கூடும் என்பதால், புது வகை கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அதற்குப் பிறகுதான் முழுமையாகத் தெரியவரும் என்று அவா்கள் கூறினா்.