பாலஸ்தீன நாட்டின் பெயரையே காணாமல் ஆக்கிய கூகுள் மேப்ஸ்!

- பாலஸ்தீனத்தை டைப் செய்தால் இஸ்ரேல் வரைபடம்
- கூகுள், ஆப்பிள் வரைடபத்தில் பாலஸ்தீனத்தை காணவில்லை
- மனித உரிமை மீறலுக்கு உடந்தை என்று குற்றச்சாட்டு
கூகுள் மேப்ஸிலிருந்து பாலஸ்தீன் நாட்டின் வரைபடமே காணாமல் போயுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் மேப்ஸ் (Google Maps) மென்பொருள், நாடுகளின் வரைபடங்கள் மற்றும் பயண வழிகளை அறிந்து கொள்ள உதவுகிறது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு நாட்டின் பெயரையே, தனது வரைபடத்தில் இருந்து கூகுள் மேப்ஸ் மறைத்துள்ளது. கூகுள் வரைபடத்தில் பாலஸ்தீனம் (Palestine) என்று தட்டச்சு செய்தால், அதிர்ச்சியளிக்கும் விதமாக, இஸ்ரேல் வரைபடமே காட்டப்படுகிறது. பாலஸ்தீன் வரைபடத்தை எப்படி மாறி மாறி தேடினாலும், பயனர்களால் பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டையே பார்க்கவே முடிவதில்லை. கூகுள் மட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக மேப்ஸ் வரைபடங்களிலும், பாலஸ்தீன நாட்டின் வரைபடம் நீக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக, இஸ்ரேல் என்ற பெயரிலேயே, பாலஸ்தீன நாடு காட்டப்படுகிறது.
சமீபத்தில், பாலஸ்தீனத்துக்கு சொந்தமான காசா மேற்குக் கரை பகுதியை, இஸ்ரேலுடன் இணைக்கப்போவதாக, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். உலக நாடுகள், இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பை, மனித உரிமை மீறல் என்று கண்டித்திருந்தன. இந்நிலையில், தொழில்நுட்ப ரீதியாகவும் அதே உரிமை மீறலை கூகுள் நிறுவனம் செய்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அமெரிக்க அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியதாவது:- “கூகுள் மற்றும் ஆப்பிள் வரைபடங்கள் பாலஸ்தீனத்தை உலக வரைபடத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக அகற்றியிருக்கின்றன. வரைபடங்களிலிருந்து இன்று பாலஸ்தீனம் அழிக்கப்பட்டது போல, நாளை நிஜ உலகத்திலிருந்தும் பாலஸ்தீனம் அழிக்கப்படும். வரைபடங்களிலிருந்து, பாலஸ்தீனம் அகற்றப்பட்டு ‘இஸ்ரேல்’ என்று மாற்றப்படுவது குறித்து, மேற்கத்திய உலகம் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்று தெரியவில்லை ” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, #IStandWithPalestine #FreePalestine என்ற ஹேஷ்டாக்குகள் டிவிட்டரில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனத்தை இஸ்ரேல் நாட்டவர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.