சென்னை மாஞ்சா நூல், பட்டம் பறக்க தடை….!

சென்னையில் மாஞ்சா நூல் தயாரிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவ்வரிசி கலவையில், கண்ணாடி துகள்களை சேர்த்து தயாரிக்கப்படும் நூலே, மாஞ்சா நூல் எனப்படுகிறது. இதைப் பயன்படுத்தி பட்டம் விடும்போது, அது அதிக உயரத்துக்கு பறந்து செல்லும். ஆனால், இந்த நூல் யார் கழுத்திலேனும் சிக்கும்பட்சத்தில், உறுதியான நூல் வெட்டுக்காயத்தை ஏற்படுத்திவிடும்.
சென்னையில், ஏற்கனவே, மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டதால், பல விபத்துக்கள் அரங்கேறி, உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதனை தடுக்க மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விடுவது தடை செய்யப்பட்டது.
தற்போது கொரோனா ஊரடங்கில் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், பொழுதுபோக்குக்காக, பட்டம் விடுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மாஞ்சா நூல் பறந்து வந்து கழுத்தில் சிக்கியதால் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, சென்னையில் மாஞ்சா நூல் தயாரிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்து உள்ளார்.