‘பணம் கொடுத்தும் பிளாஸ்மா தானம் செய்ய யாருமில்லை!’ மருத்துவர்கள் புலம்பல்

கொரோனாவை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், கொரோனாவுக்கான சிகிச்சையில் மிகவும் நம்பிக்கைக்குரிய வழிகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை இருந்து வருகிறது. கொரோனா பாதித்து அதிலிருந்து குணமடைந்தவர்கள் தங்களது பிளாஸ்மாவை தானமாக வழங்கலாம். அதை நோயாளிக்கு செலுத்தும்போது, அவரும் குணமடைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக, பிளாஸ்மா தானத்தை ஊக்குவிக்க பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சில தினங்களுக்கு முன், பிளாஸ்மா தானம் செய்வோருக்கு கர்நாடக அரசு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.
இந்நிலையில், பணம் தருவதாக கூறியும், மூன்று மட்டுமே பிளாஸ்மா தானம் செய்துள்ளதாக , பெங்களூரு மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் (பி.எம்.சி.ஆர்.ஐ) இரத்தமாற்றம் துறைத் தலைவர் டாக்டர் ஸ்ரீலதா கூறியதாவது:-
” பிளாஸ்மா நன்கொடையின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வில்லை. டெல்லி அரசாங்கம் செய்ததை போல, பிளாஸ்மா தானத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குணமான நோயாளிகள் 28 நாட்களுக்குப் பிறகு வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும். கொரோனா நோயாளிகள் சிகிச்சையை இலவசமாகப் பெறுவதால், பிற மக்களைக் காப்பாற்ற அவர்கள் முன்வர வேண்டும்.
ஒருவர் பிளாஸ்மா தானம் செய்தால், இரண்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஒவ்வொரு நாளும், பிளாஸ்மா தேவைகள் அதிகரித்து வருகின்றன. பிளாஸ்மா வங்கி இல்லாத நிலையில், அவற்றைப் பூர்த்தி செய்வது கடினம். உயர் அதிகாரிகள் இது குறித்து கடுமையான உத்தரவை வழங்க வேண்டிய நேரம் இது. ”என்று அவர் கருத்து தெரிவித்தார்.