‘கரன்ட் பில்லா கேக்குற’ மின் ஊழியர்களை மரத்தில் கட்டிவைத்த மக்கள்!

தெலுங்கானாவில் மின்சார கட்டணம் வசூலிக்கச் சென்ற ஊழியர்களை ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் மின் கட்டணம் வசூலிக்க சென்றுள்ளனர். அவர்களை கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், “கொரோனாவால் மக்கள் வேலை இழந்து வாழ்வதற்கே வழியில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் எப்படி மின்சார கட்டணம் வசூலிக்கலாம்?” என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் திமிராக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிராம மக்கள் அதிகாரிகளை மரத்தில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் , கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களை மீட்டனர். இது தொடர்பாக கிராம மக்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.