‘சேற்றில் ஊறி எழுந்து வந்த பன்றிகள்’ ஸ்டாலின் கடும் விமர்சனம்

கறுப்பர் கூட்டம் என்ற பெயர் கொண்ட அமைப்பினர், கந்த சஷ்டி கவச பாடலில் உள்ள வரிகளை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோக்களை வெளியிட்டனர். இது இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு அளிப்பதாக டுவிட்டரில் போலி தகவல் பதிவிடப்பட்டன.
இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரும்பான்மை இந்து மக்களுக்காக, 65.5% விழுக்காடு இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது தி.மு.க. அதுமட்டுமின்றி, திருவாரூர் கோவில் தேரோட்டம், மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளம் தூர்வாருதல் எனத் தொடங்கி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலின் திருப்பணியிலும் கவனம் செலுத்தியது தி.மு.க. கவனிப்பாரற்று இருந்த கோவில்களிலும் ஒரு காலப் பூசையேனும் நடந்திட வழிவகுத்தது தி.மு.கழக ஆட்சி. கிராமப்பூசாரிகள் நலனுக்காக வாரியம் அமைக்கப்பட்டது; தமிழ் வழிபாட்டு முறைக்கு முன்னுரிமை தரப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டவன் சன்னதியில் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இப்படி எடுத்துச் சொல்ல எத்தனையோ இருக்கின்ற நிலையில், நம்மை நோக்கி ‘இந்து விரோதிகள்’ என்று விமர்சனத்தை வைத்து, வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என அரதப்பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்து பார்க்கிறார்கள்.
பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பும் சதிவேலைகளைச் செய்தபடியே, பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கான, 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதனால் பாதிக்கப்படும் பெரும்பான்மை இந்து மக்கள் உரிமைக்காக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
எங்கோ – எதுவோ ஒன்று நடந்தாலும் அதனைத் தொடர்புபடுத்தி தி.மு.கழகத்தின் மீது பழிசுமத்திட சில அரைவேக்காடுகளை ஆள்பிடித்து வைத்திருக்கிறார்கள். மாநிலத்தை ஆளும் அடிமை ஆட்சியாளர்கள், தி.மு.க.,வை தமிழர்களின் எதிரியாக சித்தரிக்க நினைக்கும் திடீர் அரசியல் நகைச்சுவையாளர்கள் என அவர்களின் கூட்டத்தில் எடுபிடிகள் ஏவல்செய்வோர் ஏராளமாக இருக்கிறார்கள்.
சேற்றில் ஊறி எழுந்து வந்த பன்றி தன் உடலைச் சிலுப்புகிறதே என்று, ஆற்றில் குளித்துவிட்டு வரும் நாமும் பதிலுக்கு அதன்முன் சிலுப்பிக் கொண்டிருக்கக்கூடாது. மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் நலனுக்காவும் பாடுபடவேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. சதிகாரர்களின் சமூக வலைதள வலைகளில் சிக்கி உங்கள் நேரத்தை வீணடித்திட வேண்டிய தில்லை. அதனை உரிய முறையில் தலைமைக் கழகம் கவனித்துக் கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.