“உறுப்பினர்கள் மற்றும் மந்திரிகளுக்கே இந்த கதி எனில், மையங்களுக்கு சென்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு??” – அமரீந்தர் சிங் அதிர்ச்சி தகவல்…

பஞ்சாபில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க 2 நாட்களே உள்ள நிலையில் 23 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என முதல் மந்திரி அமரீந்தர் சிங் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாபில் முதல் மந்திரி அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு நடத்துவதற்கு தடை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த மாநில முதல் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வழியே இன்று நடந்தது.
இதனை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையேற்று நடத்தினார். இதில், கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தேர்வுகள் நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், சத்தீஷ்கார் முதல் மந்திரி புபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், கொரோனா காலகட்டத்தில் தேர்வுகளை நிறுத்தி வைப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழலில், இதற்காக நாம் அனைவரும் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என்று கூறினார். உலகம் முழுவதும் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பதனையும் அவர் சுட்டி காட்டினார்.
தொடர்ந்து அவர் கூறும்பொழுது, பஞ்சாபில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க 2 நாட்களே உள்ளன. ஆனால் இன்று வரை 23 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மந்திரிகளுக்கே இந்த கதி ஏற்பட்டுள்ளது எனில், நிலைமை எப்படி உள்ளது என நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு சென்று மாணவர்கள் தேர்வெழுதும் சூழ்நிலை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.