பள்ளியில் படித்து, +2 வில் பாஸ் ஆன பாட்டி!

மேகாலயா மாநிலம் ரிபோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாகிண்டியூ சியெம்லீ (வயது 50). நான்கு பிள்ளைகளுக்கு தாயான இவருக்கு, இரண்டு பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
இந்த பாட்டி, மாணவர்களோடு மாணவர்களாய் சீருடையுடன் பள்ளிக்கு சென்று படித்து, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதித்திருக்கிறார். இதுதொடர்பாக இவர் கூறியதாவது:-
சிறுவயதில் கணக்குப் பாடம் கடினமாக இருந்தது. அதனால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். அதன்பின்னர், 26 ஆண்டுகள் கழித்து படிப்பைத் தொடர மீண்டும் ஆசை வந்தது.
2015இல், திறந்தவெளிப் பள்ளியில் மாலைநேர வகுப்பில் சேர்ந்தேன். அங்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர், பள்ளிக்கூடத்துக்கு நேரடியாகச் சென்று படிப்பதற்கு முடிவு செய்தேன்.
கல்வி அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று, எனது கிராமத்தில் உள்ள பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயில சேர்ந்தேன். மற்ற மாணவர்களைப் போலவே நேர்த்தியாக சீருடை அணிந்து சென்றேன்.
என்னுடன் படித்த மாணவர்கள் என்னை அம்மா என்றே அழைத்தார்கள். நான் நடனம், பாட்டு, சுற்றுலா என்று, என் நிறைவேறாத ஆசைகள் அத்தனையையும் பூர்த்தி செய்தேன். என்னுடைய மகள்கள் கல்விக்கு உதவி செய்தார்கள்.
சமீபத்தில் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியானது. அதில் நான் மூன்றாம் கிரேடில்தான் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்குப் பிடித்தமான காசி மொழியில் இலக்கியம் சார்ந்த பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். கல்வியின் முக்கியத்துவத்தை நான் நன்றாக அறிந்துள்ளேன். கல்வி இல்லையென்றால் எதுவுமில்லை.
இவ்வாறு 50 வயது பள்ளி மாணவி சியெம்லீ தெரிவித்துள்ளார்.