கேரள விமான விபத்து: விசாரிக்கிறது 5 பேர் அடங்கிய குழு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து விசாரிக்க 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு, அண்மையில் வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கரிப்பூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள, விமான விபத்து விசாரணை முகமை குழு ஒன்றை அமைத்துள்ளது. 5 பேர் அடங்கிய இந்த குழு, விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து, 5 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
இதற்கிடையே, விபத்து நடைபெற்ற கோழிக்கோடு விமான நிலையத்தில், பெரிய ரக விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.