அசாம் வெள்ளத்திற்கு உதவி தேவையென்றால் அழையுங்கள் – ஐ.நா நேசக்கரம்

அசாமில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் மாநிலத்தின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை அறிந்த ஐ.நா., இந்தியா அழைத்தால் உதவ தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளது.
ஐ.நா பொதுச் செயலரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர் சந்திப்பின் போது அசாம் வெள்ள நிலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியாவின் அசாம் மாநிலத்திலும், அண்டை நாடான நேபாளத்திலும் கிட்டத்தட்ட 40 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அறிகிறோம். தேவைப்பட்டால் இந்திய அரசுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது. உலக உணவு திட்டத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஹெலிகாப்டர்கள் மூலம் சென்றடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தொலைதூர இடங்களை அணுகுவது கடினமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ளத்தால் 24 மாவட்டங்களில் 24.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 85 பேரும், நிலச்சரிவுகளில் சிக்கி 26 பேரும் என மொத்தம் 111 பேர் உயிரிழந்துள்ளனர்.