இந்தாண்டுக்குள் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைப்பது சந்தேகமே!

கொரோனாவுக்கு எதிரான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என தடுப்பூசி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சீனாவிலிருந்து உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனா வைரஸை அழிக்க தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் தயாரித்த ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து இரண்டு சோதனைகளில் தேறியுள்ளது. மூன்றாவது கட்டமாக, மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால் கொரோனா தடுப்பூசி இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தகவல் கசிந்தது. இந்நிலையில் தடுப்பூசி கண்டறியும் குழுவின் தலைவரான சாரா கில்பர்ட் மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பேட்டியளித்துள்ளார். அதில் தடுப்பு மருந்து இறுதி கட்ட சோதனைகளில் வேலை செய்ய வேண்டும். பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இந்த விஷயங்கள் நடக்க வேண்டியது. இந்தாண்டு இறுதிக்குள் மருந்து கிடைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால் அதனை உறுதியாக கூறமுடியாது என தெரிவித்துள்ளார்.