ஜெயராஜ், உறவினர் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை – மகன் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக, உயிரிழந்த ஜெயராஜ் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை சம்பவம் தொடர்பாக, 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியது.
இந்நிலையில், காவலர்கள் வெயிலுமுத்து, சாமதுரை, செல்லத்துரை ஆகியோரை, சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு, விசாரணைக்காக சி.பி.ஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, உடலில் ரத்தக்காயங்கள் இருந்தது குறித்து விசாரணை நடத்தி அது தொடர்பான வீடியோவை பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஜெயராஜ் வீட்டுக்குச் சென்ற சி.பி.ஐ அதிகாரிகள், வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். பரமன்குறிச்சியில் உள்ள ஜெயராஜ் உறவினர் வீட்டிலும் விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் காவல்நிலைய எழுத்தர் பியூலாவிடமும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணை நான்கரை மணி நேரம் நீடித்தது. இதனிடையே, விசாரணையில் மொழி பிரச்சனையாக இருந்ததால், தமிழ் தெரிந்த சிபிஐ அதிகாரி ஒருவர் வரவழைக்கப்பட்டார்.