வீரமரணமடைந்த ராணுவ வீரர் மனைவிக்கு துணை ஆட்சியர் பதவி

லடாக் பள்ளத்தாக்கில், சீன வீரர்களுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணமடைந்த தெலங்கானாவைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷி, துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லடாக் எல்லையில், இந்திய – சீன வீரர்களிடையே கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில், நாட்டுக்காக வீரமரணம் அடைந்த, தெலுங்கானாவைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு, துணை கலெக்டர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அம்மாநில சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ், அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். சந்தோஷிக்கு ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் பணி வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அவரது பணிகள் அனைத்தும் தெரியும் வரை கலெக்டர் அலுவலகத்தில் இருப்பவர்கள் அவருக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு 711 சதுர அடியில் வீடு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.