முற்றிய செல்பி மோகம்!!! வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகள்….

மத்திய பிரேதசத்தில் சுற்றுலா சென்ற சிறுமிகள் இருவர் ஆற்றின் நடுவே சென்று செல்பி எடுக்க முயன்ற போது திடீர் என பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பெஞ்ச் ஆற்றிற்கு 6 சிறுமிகள் சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் மேகா ஜாவ்ரே மற்றும் வந்தனா திரிபாதி ஆகிய இருவர் ஸ்மார்ட்போனை எடுத்துக் கொண்டு ஆற்றின் நடுவே சென்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களை சுற்றி நீரின் அளவு உயர்ந்தது.

அங்கிருந்து வெளியேற முடியாமல் பாறை மேல் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு உயிர் பயத்தில் அலறினார்கள். அவர்களுடன் வந்த மற்ற சிறுமிகள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் உள்ளூர் ஆட்கள் உதவியுடன் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி அவர்களை மீட்டனர். இக்காட்சிகள் வீடியோவாக இணையத்தில் பரவி வருகிறது.
