கொரோனாவை விட கொடிய என்விரான்மெண்ட் இம்பாக்ட் அஸ்ஸெஸ்மெண்ட்….
2020ஆம் ஆண்டு தொடங்கியது முதலே உலகத்துக்கு கொரோனாவைத் தவிர வேறெந்த பிரச்சினையும் கண்ணுக்குத் தெரியவில்லை. இந்நிலையில், இந்தியாவுக்குள் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கிய மார்ச் மாதத்தில், நாம் கவனிக்காமல் விட்ட ஆபத்துகளில் ஒன்றாக சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 இருக்கிறது.
உலகத்தின் சூழலியல் வெகுவாக சீரடைந்து வந்த நிலையில், இந்தியாவின் சூழலியலைக் கண்டுகொள்ளாமல், முதலீட்டை முன்னிலைப்படுத்தும் விதமான சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு வெளியாகியுள்ளது என்ற விவகாரம் பரவலாகி வருகிறது. சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment IMpact Assessment) என்றால் என்ன அதிலுள்ள பிரச்சினைகள் என்னென்ன?
EIA 2020 என்றால் என்ன?
சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்களால், ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல் சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment IMpact Assessment) என்று அழைக்கப்படுகிறது.
1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நடைமுறையில் இருக்கின்றது. தற்போது, ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2006’ நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இதன் மீதான மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது.
இதனால் நமக்கு என்ன பேராபத்து???
சூழலியல் தாக்க மதிப்பீட்டின் நோக்கம் சுற்றுச்சூழலுக்கான தீவினைகளை முன்பே கணித்து அதனைத் தடுப்பதுதான். அதற்கு மக்கள் கருத்து, நிபுணர் அறிக்கை, ஆய்வு என பல்வேறு வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது இந்தச் சட்டம். ஆனால், தற்போது வந்திருக்கும் வரைவு, சூழலியல் பாதுகாப்பு என்பதைக் கைவிட்டு முதலீட்டை முதன்மைப்படுத்துகிறது என்பதுதான், இந்த வரைவின் மீது சூழலியாளர்களின் முதல் பார்வை.
இந்த வரைவின் செயல் வடிவம் பல்வேறு தொழிற்சாலைகளை, அவை தொடங்கப்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கையாகச் செய்யும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதே போல அனுமதி பெறுவதையும் தொழிற்சாலைகளுக்கு எளிமையாக்கி இருக்கிறது.
இனி நாம் என்ன செய்ய வேண்டும்??
தற்போதைய வரைவின்படி இனி, இரண்டு விதமான சுற்றுச்சூழல் அனுமதிகள் வழங்கப்படும். ஒன்று, வல்லுநர் குழு அமைக்கபட்டு குறிப்பிட்ட திட்டம் குறித்த ஆய்வுகளை நடத்திய பின்னர் சூழலியல் அனுமதி வழங்குவது. இரண்டாவது, எந்தவித வல்லுநர் குழு ஆய்வுமின்றி அனுமதி கொடுத்துவிடுவது.
இது எந்தவிதத்திலும் மக்கள்நலனுக்கு ஆதாரவனதாகவோ, சூழலியல் பாதுகாப்புக்கு உகந்ததாகவோ இருக்காது என்பது சூழலியல் ஆர்வலர்களின் முதன்மையான குற்றச்சாட்டு. இந்த வரைவின் மீதான மக்கள் கருத்துக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே நம் அனைவரும் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் eia2020.moefcc@gov.in என்ற இணையுள் சென்று, நம் எதிர்ப்பை பதிவுவசெய்வோம். இனி செய்யாவிடின் நம் இந்தியா தரை மட்டமாக்கப்படும்.பாலைவனமாக மாறும்.அடுத்த நம் சந்ததியினர் வாழ்வதே கேள்வி குறியாகிவிடும்.
கட்டுரையாளர்- கனியன் கார்த்திக், சுற்றுச்சூழல் ஆர்வலர்.
(கட்டுரையாளரின் கருத்துகள், அவரின் தனிப்பட்ட பார்வை. தம்பட்டம் செய்தி இணையதள குழு, இந்த கருத்துகளுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. )