பூட்டி கிடந்த வீட்டிற்கு 11 ஆயிரம் மின் கட்டணமா??

நாகை மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக்கும் மேலாக பூட்டிக் கிடந்த வீட்டிற்கு ரூ.11,000 மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின்கட்டணத்தை ஊரடங்கு காலத்திற்குப் பிறகு கட்டலாம் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்திலிருந்து மின் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மின்கட்டணம் கணக்கெடுப்பு முறையில் குளறுபடிகள் இருப்பதாகவும், அளவுக்கு அதிகமாக கட்டணங்கள் விதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நாகை மாவட்டம் பொறையார் அடுத்துள்ள சங்கரன்பந்தலில், வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் வீடு கடந்த ஓராண்டாக பூட்டி கிடந்துள்ளது. ஆனால், அந்த வீட்டிக்கு தற்போது ரூ.11,000 மின் கட்டணம் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று அந்த பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளிலும் மின்கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டாலும் உரிய பதில் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்து வரும் நிலையில், மின்கட்டணம் பன்மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டில் முடங்கி உள்ளதால் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தி உள்ளர்கள் என்று அரசு பல மடங்கு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.