செருப்பு மாலை விவகாரம் ; பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருக்கோவிலூர் அருகே தந்தை பெரியார் சிலைக்கு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட சம்பவம் நடந்தது. அதுதொடர்பாக ஒருவரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குச் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். இதையறிந்த பெரியாரிய அமைப்பினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினரும் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
எனினும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் காமராஜர் வீதி, கீழ்பெரும்பாக்கம், சென்னகுணம், சிறுவந்தாடு உள்ளிட்ட 11 இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.