தமிழகத்தில் இப்போதைக்கு பஸ், டிரைன் ஓடாது…

தமிழத்தில் கொரோனா பரவல் குறையாததால் ஊரடங்கு தளர்வில் பொதுபோக்குவரத்து துவங்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று தமிழகத்தில் 6,993 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6,993 பேர்களில் 1,138 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 95,857 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வருகிற 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஜூலை மாதம் முழுவதும் எல்லா ஞாயிறன்று மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

சென்னையின் பாதிப்பு ஓரளவு குறைந்துள்ள நிலையில் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் (30 ஆம் தேதி) முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டாலும் ஆகஸ்ட் 1 முதல் பஸ்கள் மற்றும் ரயில்கள் இயங்குவதற்கான வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகி உள்ளது.
பொதுப் போக்குவரத்தை அனுமதித்தால், நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் தற்போது உள்ள ஏற்பாடே தொடரும் என தெரிகிறது.