7 ம் வகுப்பு பாடத்திலிருந்து திப்பு, ஹைதர் அலி நீக்கம்; குவியும் கண்டனம்

கர்நாடக மாநிலத்தின் 7 ம் வகுப்பு பாடத்தில் இருந்து சுதந்திர போராட்ட மாவீரர்கள் திப்பு சுல்தான், ஹைதர் அலி குறித்த பாடபகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இது மதவாத சிந்தனையின் வெளிப்பாடு என்று வரலாற்று ஆசிரியர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டிசாரின் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் திப்பு சுல்தான். உலகின் முதல் ஏவுகணையை கண்டறிந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 1799ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீரங்கப்பட்டனத்தில் நடந்த போரில் வீரமரணம் அடைந்தார் திப்பு சுல்தான். இந்நிலையில், தொற்று நோய் காரணமாக கர்நாடக மாநில அரசு 2020-21 ம் ஆண்டிற்கான பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்தது. இதனையடுத்து 7 ம் வகுப்பில் சமூக அறிவியல் பாடபிரிவில் 5-ம் அத்தியாயத்தில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி ஆகியோரை குறித்த பாடபகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
பா.ஜ.க தலைமையிலான ஆட்சி கர்நாடகாவில் நடந்து வரும் நிலையில், திப்பு பாட நீக்க நடவடிக்கையை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் கண்டித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளி பாட புத்தகத்தில் இருந்து திப்பு பகுதிகளை நீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜ.க தரப்பில் கோரப்பட்டது. இது குறித்து ஆராய மாநில அரசு குழு ஒன்றை அமைத்தது. ஆனால், எந்த ஒரு சூழ்நிலையிலும் பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் ,ஹைதர் அலியை நீக்கி வைக்க முடியாது என அக்குழு பரிந்துரைத்தது. இதனிடையே, 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து சுதந்திர வீரர் திப்புசுல்தான் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள கர்நாடக மாநில அரசின் பாட புத்தக நிறுவனம் 6 மற்றும் 10 ம் வகுப்புகளில் சமூக அறிவியல் பாடப்பிரிவில் திப்பு சுல்தான், மற்றும் ஹை தர்அலி பாட பகுதிகள் நீக்கப்படவில்லை என விளக்கம் கூறி உள்ளது.