விஜயகாந்த் ‘கிங்’ ஆக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்! பிரேமலதா பேட்டி!!!

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கூட்டணியா? தனித்துப் போட்டியா? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் பிறந்த நாள் விழா இன்று தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை விருகம்பாக்கத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜயகாந்த் எப்போது கிங் ஆக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் கருதுகிறார்கள். அது குறித்து டிசம்பர், ஜனவரியில் பொதுக்குழு, செயற்குழு கூட்டி முடிவெடுக்கப்படும். கொரோனா காலத்தில் மாவட்டந்தோறும் கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைனில் நடத்திய ஆலோசனையில் தனித்துப் போட்டிக்கு ஆதரவு திரண்டுள்ளது.” என பிரேமலதா தெரிவித்தார்.

“எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியா? கூட்டணியா? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். ஆனால், யாருடன் கூட்டணி குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. தற்போதைக்கு அதிமுக உடனான கூட்டணியே தொடரும்” என பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக கூறினார்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, ‘மும்மொழி கொள்கையை எதிர்பவர்களின் பிள்ளைகள் தமிழ் தான் பேசுகிறார்களா? ‘அன்னை தமிழை காப்போம், அனைத்து மொழியையும் கற்போம்’ என்பது விஜயகாந்தின் நிலைப்பாடு.’ என்று பிரேமலதா கூறினார்.