புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2019 ஜூலையில் வெளியிடப்பட்ட புதிய கல்வி வரைவுக் கொள்கைக்கு தற்போது மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை தயாரிக்க இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மக்கள் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டது.
புதிய கல்விக் கொள்கையிலிருந்த மும்மொழிக் கொள்கை, ஒரே நாடு – ஒரே கல்வி முறை, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தேசிய திறனறித் தேர்வுகள் நடத்த வேண்டும், தேசிய தேர்வு முகமை மூலம் எல்லா கல்லூரி, பல்கலைக்கழக படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் போன்ற அம்சங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள் பெறப்பட்டன. அவற்றின் அடிப்படையில் சில திருத்தங்களும் செய்யப்பட்டன. தற்போது அந்த புதிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று அக்கொள்கை வெளியிடப்படும்.