வண்டலூரில், அதி நவீன பேருந்து நிலையம்…

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் , வண்டலூரில் பேருந்து நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் படி வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் புது புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் ரூ.309 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் அதிநவீன புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பேருந்து நிலையத்தில் 7.4 ஏக்கரில் மாநகர பேருந்துகள் நிற்க 13 பிளாட்பார்ம்கள் அமைக்கபடவுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் 84 மாநகர பேருந்துகள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.
இதுமட்டுமல்லாமல் 1100 கார்கள், 2798 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
தினந்தோறும் 75 ஆயிரம் பயணிகள் வர ஏதுவாக இந்த பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளன. வெளி மாவட்டங்களுக்கு செல்ல அதி விரைவு பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
வழக்கம் போல தாய்மார்களுக்கு ஏதுவாக, பாலூட்டும் அறை, முதலுதவி மையம், ஓட்டுநர்கள் நடத்துநர்கள் ஓய்வெடுக்கும் அறை, கழிப்பறைகள், நகரும் படிக்கட்டுகள் போன்ற அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே போல ஆட்டோ மற்றும் கால் டாக்சி வாகனங்கள் நிறுத்த தனி இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தின் வரைபடம் வெளியாகி வைரலாகி வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட அதி நவீன வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.