வங்கி அமைப்பு முறையைச் சீரமைக்க முயன்றதாலேயே, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலை பதவியிலிருந்து மத்திய அரசு காலி செய்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் பதவிக்காலம் முடிந்தபின் கவர்னராக வந்தவர் உர்ஜித் படேல். குறுகிய காலமே பதவியில் இருந்த உர்ஜித் படேல், 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா சமீபத்தில் ஒரு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “திவால் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டதால் அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேலுக்கும் , மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அரசு செய்ய இருந்த திருத்தங்களுக்கு உர்ஜித் படேல் சம்மதிக்கவில்லை. இதனால் அவர் பதவியிருந்து விலக நேர்ந்தது” எனத் தெரிவித்திருந்தார்.
அந்த நாளேட்டின் செய்திiய சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “ வங்கி முறையைச் சீரமைக்க முயன்றதற்கு உர்ஜித் படேல் தனது பதவியை இழக்க நேர்ந்தது. ஏன் தெரியுமா, வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களை காப்பாற்ற பிரதமர் விரும்புகிறார்.” எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக தகவல் தொடர்பு பொறுப்பாளர் அமித் மாளவியா “பரபரப்பாக ஏதாவது ஒன்றை எழுதுவதால் நீங்கள் பொருளாதார வல்லுநர் ஆகிவிட முடியாது.” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, கொரோனா வைரஸ் லாக்டவுனால் வேலையிழந்தவர்கள், தங்களின் இ.பி.எஃப் பணத்தைப் பயன்படுத்தி வாழ்கிறார்கள் என்று மத்திய அரசை கூறி வருவதை ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “ வேலைவாய்ப்புப் பறிக்கப்பட்டும், சேமிப்பு அபகரிக்கப்பட்டும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியவில்லை. ஆனால், உயர்ந்த பொய்யான கனவுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள். இபிஎஃப் கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியைக் கடந்த 4 மாதத்தில் மக்கள் திரும்பப் பெற்றுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
