இங்கிலாந்திலிருந்து வீடு திரும்புகிறார் நடராஜர் – 9-ம் நூற்றாண்டு சிலை மீட்பு!

இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கடத்தப்பட்ட 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜரின் அரிய கல் சிலையை லண்டனிலுள்ள இந்திய தூதரகம் மீட்டு இந்தியா கொண்டு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரோலியில் உள்ள காதேஷ்வர் சிவன் கோவிலில் பழமையான நடராஜர் சிலை இருந்தது. அது 1998-ம் ஆண்டு திருடு போனது. 2003-ம் ஆண்டு இந்த சிலை இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
ஆகஸ்ட் 2017-ம் ஆண்டு இங்கிலாந்தின் இந்திய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை இந்திய தொல்லியல் ஆய்வு துறையினர் பரிசோதித்தனர். அது ராஜஸ்தானின் காதேஷ்வர் கோவிலிலிருந்து திருடப்பட்ட அதே சிலை தான் என்பது உறுதியானது.
வெளியுறவு அமைச்சகம் மற்றும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முயற்சியால் அச்சிலை தற்போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 4 அடி உயர நடராஜ மூர்த்தியின் சிலை கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி சுந்தர தாண்டவத்தில் நடராஜர் காட்சியளிக்கிறார்.