பிரசவத்திற்கு முன் இல்ல… பிரசவத்திற்கு பின் இருக்கு… குழப்பும் கொரோனா

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு எடுக்கப்பட்டகொரோனா பரிசோதனையில், முன்னுக்கு பின் முரணாக முடிவுகள் வந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
20 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்தவாரம் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. எனவே கொரோனா தொற்றை அறிந்து கொள்ள சோதனை செய்யப்பட்டது.
சோதனையின் முடிவில் அந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது.
கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா அறிகுறிகள் இல்லாததை உறுதி செய்துவிட்டு அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சையில் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு எடுக்கப்பட்ட சோதனையில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது.
கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு பின் எடுக்கப்பட்ட பிசிஆர் சோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் 4 மணி நேர இடைவெளியில் எப்படி கொரோனா பாதிப்பு வந்தது எனக் குழம்பினர்.
இதுகுறித்து பேசிய மருத்துவர் சில்பா, “மிகவும் குழப்பம் தருகிறது. தற்போது அந்தப் பெண்மணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பிரசவ அறுவை சிகிச்சைக்கு முன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. கோவிட் -19 ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும் கருவையும் எவ்வளவு பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள நஞ்சுக்கொடி நோயியலில் நிறைய ஆய்வு செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்தார்.