“2022ம் ஆண்டு தான் தரமான கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி கிடைக்கும்!” நிபுணர்கள் நம்பிக்கை!!

தரமான தடுப்பூசி கிடைக்க 2022ம் ஆண்டு வரை ஆகலாம் என கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை உலக அளவில் 3 கோடியே 44 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். அதே போல, 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல நாட்டு அரசுகள் பலவிதமான நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.
கொரோனா பரவலை தடுக்க, தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை சற்று சிரமமாக உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பலர் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தரமான கொரோனா வைரஸ் தடுப்பூசி 2022ம் ஆண்டுதான் மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தடுப்பூசி நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கனடாவை சேர்ந்த மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 28 நிபுணர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த 28 பேரும் தடுப்பூசி தயாரிப்பு துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களின் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அமெரிக்க அதிகாரிகள், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், அடுத்த ஆண்டு இறுதியே ஆனாலும் தரமான தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை. 2022-ம் ஆண்டில் தான் மக்களுக்கு தரமான தடுப்பூசி கிடைக்கும். தரமான தடுப்பூசி கிடைப்பதற்கு முன்பு, தடுப்பூசி பணிகளில் 2 பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.