மத்திய அரசை எச்சரித்த மு.க.ஸ்டாலின் !!!

சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சட்ட போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் செயல்படும் மத்திய பாஜ அரசு, திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும், சமூகநீதிக்கும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிராக இருப்பதுடன், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும் நெருக்கடி இருளில் தள்ளும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் இதனைத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து கண்டனத்தை உறுதியாகப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ, எதிர் நடவடிக்கை பாய்ந்துவிடுமோ, என்றெல்லாம் எண்ணி, பயந்து, பதுங்கி, அமைதி காப்பது, தமிழ்நாட்டில் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாகும்.குறிப்பாக, புதிய கல்விக் கொள்கையில், பேரறிஞர் அண்ணாவின் இருமொழித் திட்டத்திற்கு மாறாக, வலியுறுத்தப்படும் மும்மொழிக் கொள்கை பற்றி அதிமுக அரசு உடனே மவுனம் கலைத்தாக வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை எனப் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தின் பயனாக, தாய்மொழியாம் தமிழ்மொழி வளர்ச்சி பெற்றதுடன், தொடர்பு மொழியான ஆங்கிலம் வாயிலாகத் தமிழகத்து மாணவர்கள் இன்று உலக அளவில் பெரும் பொறுப்புகளை வகிக்கிறார்கள். தாய் மண்ணுக்குப் புகழ் சேர்த்து வருகிறார்கள். வட இந்திய மாணவர்களைவிடத் தமிழக மாணவர்கள் பெற்றுள்ள அந்த வளர்ச்சியின் உயரத்தைச் சிதைத்திடும் நோக்கத்தில், இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க மத்தியஅரசு முற்படுகிறது. அண்ணாவின் இருமொழிக் கொள்கைத் திட்டத்தைப் பலி கொடுத்து, மிச்சமிருக்கும் ஆட்சிக்காலத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறதா இந்த அரசு?

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கூட தங்கள் ஆட்சிக்காலத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்த நிலையில், அவர்களுக்கும் சேர்த்தே துரோகம் செய்யத் துணிந்து விட்டதா இன்றைய அதிமுக அரசு? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மெகபூபா முப்தியின் தடுப்பு காவலுக்கு கண்டனம்’
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ”காஷ்மீரில், மெகபூபா முப்தி மற்றும் பிற அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் குரல்கள் ஒடுக்கப்பட்டும், அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டும் ஓராண்டாகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை திமுக எதிர்க்கிறது’ என கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x