ஏங்க தனியார் ஆஸ்பத்திரில ட்ரீட்மென்ட்… எய்ம்ஸ்க்கு ஏன் போகல…. அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் சசிதரூர் கேள்வி
அமித் ஷா, தற்போது ஹரியானா மாநிலத்தில் குருகிராம் பகுதியில் உள்ள மேதாந்தா எனும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் ஏன் அரசின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லவில்லை எனக் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நம்முடைய உள்துறை அமைச்சர் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருக்கும்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல விரும்பாமல் அண்டை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றது ஏன் என்பது வியப்பாக உள்ளது. பொது நிறுவனங்கள் குறித்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்றால் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு முக்கியமானது” என்று பதிவிட்டுள்ளார்.
சசி தரூரின் கேள்வி தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிப்படைந்த பிற பா.ஜ.க தலைவர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பாகக் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், பாபுல் சுப்ரியோ, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, இணை செயலாளர்கள், அமித் ஷாவின் தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிலும் அமித் ஷா கலந்துகொண்டார். இதுதொடர்பான கேள்விகள் எழுந்தபோது, அமைச்சர்கள் தனிமனித இடைவெளியைக் கூட்டத்தில் பின்பற்றியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியதும் குறிப்பிடத்தக்கது.