அயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமிபூஜை பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட கடந்தாண்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சார்பில் அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உத்தர பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க., அரசு ராமர் கோவில் கட்டும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, அயோத்தியில் இன்று பிற்பகல் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார். இதைத் தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து, பூமி பூஜையில் பங்கேற்கும்படி முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அயோத்தி நகரம் முழுவதும் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ராமர் கோவில் கட்ட 30 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாக ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோவில் பூமி பூஜை இன்று நடைபெற உள்ள நிலையில், அயோத்தி நகர் உட்பட மாநிலம் முழுதும் உள்ள மக்கள், நேற்றிரவு லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றினர். இதனால், அயோத்தி நகரமே தீபவொளியில் ஜொலித்தது. முதலமைச்சர் யோதி ஆதித்யநாத்தும் தனது இல்லத்தில் தீப ஒளி ஏற்றி பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தார்.