அஜித் பட வில்லன் வீட்டில் போதைப் பொருள் சோதனை நடத்திய பெங்களூரு காவல்துறை!!!

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் பெங்களூரு காவல்துறையினர் இன்று சோதனை நடத்தியுள்ளார்கள்.
கா்நாடகத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரியவந்ததைத் தொடா்ந்து, போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் படையின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆந்திரத்தில் இருந்து கா்நாடகத்துக்கு கடத்தப்பட்ட 200 கிலோ எடை கொண்ட போதைப் பொருள்களைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணையின் போது, கன்னடத் திரையுலகைச் சோந்த பல கலைஞா்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கன்னடத் திரையுலகில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக காணப்படுவதாக திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தாா். இதைத் தொடா்ந்து, கன்னடத் திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. மேலும், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் நடிகைகள் ராகினி திவிவேதி, சஞ்சனா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் மும்பையில் உள்ள பிரபல நடிகர் விவேக் ஓபராயின் வீட்டில் குற்றப்பிரிவு காவலர்கள் இன்று சோதனை செய்தார்கள். விவேக் ஓபராயின் உறவினர் ஆதித்யா அல்வாவுக்குப் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு உள்ளதால் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது. கர்நாடக முன்னாள் அமைச்சரான ஜீவராஜ் அல்வாவின் மகனான ஆதித்யா தலைமறைவாகியுள்ளதால் அவரைக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.