பூங்காவிற்கு சென்ற சிறுவன் கழுத்து இறுக்கி பலி..

மேற்கு தாம்பரம் குளக்கரை 2வது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மவுனிக் (10), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள அம்பாள் நகர் சிறுவர் பூங்காவிற்கு சிறுவன் சென்றபோது பூங்கா பூட்டப்பட்டு இருந்தது. இதனால், சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதிக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக சிறுவன் சட்டையின் காலர் பகுதி கிரில் கம்பியில் சிக்கியது.
இதனால், சட்டை சிறுவனின் கழுத்தை இறுக்கியதால் மயங்கினான். சிறுவன் விளையாட சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவனை தேடியபோது, பூங்காவின் கிரில் கம்பியில் மயங்கிய நிலையில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவனை உடனடியாக மீட்டு, பழைய பெருங்களத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.