கொச்சி காவல் துறையிடம் சரணடைந்த சபரிமலை பெண்மணி ரெஹானா பாத்திமா!!!!

சபரிமலை விவகார சர்ச்சையில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா , தனது நிர்வாண உடலின் மேல் பகுதியில் தன்னுடைய 14 வயது சிறுவனும், 8 வயது சிறுமியும் ஓவியம் வரைவதைக் காட்டும் ‘பாடி ஆர்ட் அண்ட் பாலிடிக்ஸ்’ என்ற வீடியோ கிளிப்பை யூடியூபில் பதிவேற்றியிருந்தார்.
இதற்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில் அவர் மீது போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்படுவதை தவிர்க்க, கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் அங்கும் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை. அங்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு “இது ஆபாசத்தை பரப்பிய செயல். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு இதன் மூலம் என்ன அபிப்ராயம் கிடைக்கும்?” என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

இந்நிலையில் ரெஹானா நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில், “எதிர்பார்த்த ஜாமீன் கிடைக்காத சூழலில், இன்று மாலை விசாரணை அதிகாரி முன் சரணடைகிறேன். மேல் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். பாலின சமத்துவம் மற்றும் ஒரு பெண்ணின் உடலை தீவிரமாக பாலியல் மயமாக்குவதற்கு எதிரான சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை ஆதரித்த அனைவரிடமும் அன்பு செலுத்துகிறேன். நாங்கள் சொல்வது சரிதான் என்பதை காலம் நிரூபிக்கட்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.

இதே ரெஹானா கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபரில் சபரிமலை கோயில் ஆலயத்தில் நுழைவது தொடர்பான சர்ச்சையில் சிக்கியதை அடுத்து அவர் வேலை செய்து வந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து கடந்த 18 மாதங்களாக, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவரது பேஸ்புக் பதிவுகளில் வகுப்புவாத பதட்டத்தை ஏற்படுத்தியதற்காக, ஒழுங்கு நடவடிக்கையாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.