முஸ்லீம் முதியவரை `ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி அடித்து துன்புறுத்திய மனித மிருகங்கள்!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் எனும் பகுதியில் 52 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை `மோடி ஜிந்தாபாத்’ மற்றும் `ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட மறுத்ததால் சிலர் சேர்ந்து தாக்கி அவரிடம் இருந்த பொருள்களைப் பறித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தாக்கிய இரண்டு நபர்களும் அவரது தாடியைப் பிடித்து இழுத்து பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இரண்டு பேரும் தாக்கியதில் பலத்த காயத்துக்கு உள்ளான ஆட்டோ ஓட்டுநர், காவல்துறையினரிடம் புகாரும் அளித்துள்ளார்.
கடுமையாகப் பாதிப்படைந்த ஆட்டோ ஓட்டுநர் காஃபர் அகமது கச்சவா காவல்துறையினரிடம் அளித்த புகாரின்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அருகில் இருந்த கிராமத்தில் பயணிகளை இறக்கி விட்ட பின்னர் அகமது திரும்பி வந்துள்ளார். வரும் வழியில் இரண்டு பேர் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து, `மோடி ஜிந்தாபாத்’ மற்றும் `ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட வற்புறுத்தியுள்ளனர். அவர் அதற்கு மறுத்துள்ளார்.
இதனையடுத்து, அவரது பற்களை உடைத்து கடுமையாகத் தாக்கி அவரிடமிருந்த வாட்ச் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அகமதின் முகத்தில் கடுமையான ரத்தக் காயங்களும் கண்களில் வீக்கங்களும் ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. புகாரளிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அகமது இதுகுறித்து பேசும்போது, “இரண்டு பேரும் என்னை அடிக்கத் தொடங்கினர். அவர்கள் என்னை அடித்து கோஷமிட வற்புறுத்தினர். எனது தாடியையும் பிடித்து இழுத்தனர்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட 35 வயதான ஷம்பு தயால் ஜாட் மற்றும் 30 வயதான ராஜேந்திர ஜாட் ஆகியோரை நாங்கள் கைது செய்துள்ளோம். மதுபோதையில் அவர்கள் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்று சிக்கர் பகுதியின் மூத்த காவல்துறை அதிகாரி புஷ்பேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.