பேசித் தீர்த்துக் கிட்டோம்; இனி எல்லாம் நல்லது தான்: சச்சின் பைலட்

அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புவதாக, காங்கிரஸ் தலைவர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதையடுத்து, சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இதனால், ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக, ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநில துணை முதலமைச்சர் பதவிகளில் இருந்து, சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், வரும் 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், திடீர் திருப்பமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, அதிருப்தி எம்.எல்.ஏ., சச்சின் பைலட் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ராஜஸ்தான் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக, அவர் உறுதியளித்தார். இதையடுத்து, சச்சின் பைலட்டின் பிரச்சனைகளை கேட்க 3 பேர் அடங்கிய குழுவை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைத்தார்.

அவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, செய்தியாளர்களிடம் சச்சின் பைலட் கூறியதாவது:
அரசியலில் தனிப்பட்ட தீமைகளுக்கு இடமில்லை. ராஜஸ்தானில் 5 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் ஆட்சியமைத்துள்ளோம். எங்களது குறைகளை சோனியா காந்தி கேட்டறிந்தார். 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது வரவேற்கத்தக்கது.
அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். கட்சியில் எந்தவொரு பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. கட்சிக்காக 20 ஆண்டுகள் வரை உழைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம், ராஜஸ்தான் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.