கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள் முழுமையாக செயல்படும்; ஆட்சியர் அறிவிப்பு..

கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள் முழுமையாக செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், புயலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் தலா ஒரு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்களுடன் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைப்போல் தனியார் மருத்துவமனைகளிலும் முழுமையாக மருத்துவர்கள், செவிலியர்களுடன் இயங்க வேண்டுமென அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலோர வட்டாரங்களில் கூடுதலாக ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படுமென கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை கேட்டுப்பெறலாம் என்றார்.