சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 2-வது நாளாக விசாரணை

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கின் விசாரணைக்காக, அவரது காதலி ரியா சக்ரபோர்டி, அவரது தந்தை மற்றும் சகோதரர், மும்பையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கை மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுஷாந்தின் வங்கிக்கணக்கில் இருந்த 15 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, அவரது தந்தை குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த பண மோசடி புகாரை அடிப்படையாக வைத்து, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பாட்னாவில் பதியப்பட்ட வழக்கை, மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை காரணம் காட்டி, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென, சுஷாந்த் சிங் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்டி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து, மும்பையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ரியா சக்ரபோர்டி நேற்று முன்தினம் நேரில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து, நேற்றும் நடிகை ரியா சக்ரபோர்டி, அவரது தந்தை மற்றும் சகோதரர், மும்பையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.
அப்போது அவர்களிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.