“நீ எங்கேயும் போகல.. என் கண்மணி” இறந்துவிட்ட மனைவிக்காக, அன்பு கணவர் செய்த ஆச்சரிய செயல்!
அம்மா, அப்பா, கூட பிறந்த சகோதர, சகோதரிகள் என அனைத்து உறவுகளும் ரத்த சொந்தமாய் நம்முடன் இருப்பவர்கள். ஆனால் எந்த பந்தமும் இல்லாமல், கடைசி மூச்சு வரை நம்முடன் வரும் உறவு தான் மனைவி எனும் மாதவ உறவு. ஆனால் கணவனோ, மனைவியோ திடீரென இறந்து விட்டால் அந்த மீளா துயரிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். மனைவியோ, கணவனோ இல்லாமல் இருக்கும் தனிமை என்பது கொடுமையிலும் கொடுமையான ஒரு நிகழ்வு.
கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொப்பல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. சில வருடங்களுக்கு முன்பு நடந்த மனைவியின் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு காயப்படுத்தியுள்ளது. எனினும் தனது மகள்களுக்காக அதனை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் கிருஷ்ணா ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிற்குப் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த அழகான நிகழ்வைப் பார்க்கத் தனது மனைவி இல்லையே என ஏங்கியவர், மனைவியின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என முடிவு செய்தார். இதையடுத்து மனைவியின் உருவம் போன்ற மெழுகு சிலையைத் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட இந்த சிலையை, உற்றார் உறவினர் பிரமிப்போடு பார்த்துச் சென்றனர். நிகழ்ச்சி தொடங்கியதும் கண் கலங்கிய கிருஷ்ணாவை அவரது மகள்கள் தேற்றினார்கள்.
இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்துப் பேசிய அவரது இரு மகள்கள், ”அப்பா, அம்மா மீது வைத்திருந்த அன்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அம்மாவின் மரணம் அப்பாவை நிலைகுலையச் செய்து விட்டது. ஆனால் தற்போது தங்களின் தாயார் மீண்டும் உயிரோடு வந்ததாகவே நாங்கள் நினைகிறோம்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்கள். பிள்ளைகள் மட்டும் இல்லாமல் அவர்களது உறவினர்களும் அதே நெகிழ்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.