“மீனவர்களே, கடலுக்கு செல்ல வேண்டாம்!” சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலா மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், வால்பாறை பரம்பிக்குளம் பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும், வால்பாறை, சோலையார், சின்கோனா, அவலாஞ்சி பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும், தக்கலை, பெரியாறு, மேல் பவானி பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆகஸ்டு 15ம் தேதி வரை, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். என மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 12ம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலை 3.5 முதல் 3.8 மீட்டர் வரை எழும்பக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.