ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளுக்கு 15 நாள் தடை விதித்த துபாய் அரசு!

இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கு 15 நாள்களுக்கு துபாய் விமானப் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதுமே கொரோனா ருத்ர தாண்டவமாடி வருகிறது. பல நாடுகளில், சுற்றுலா துறையின் மூலமாகவே பெரும் வருமானம் வந்துக் கொண்டிருந்தாலும், இப்போதெல்லாம் வெளிநாட்டினரின் வருகையை கலவரத்துடனேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளியை துபாய்க்கு வந்த விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளித்த காரணத்தால், இந்தியாவில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் விமானப் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.
இந்தியாவில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை 15 நாள்களுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு செப்டம்பர் 18 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் துபாய்க்கு அக்டோபர் 2-ம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
ஏற்கனவே, செப்டம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூர் – துபாய் சென்ற விமானத்தில் பயணித்த பயணி, கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையிலும், விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.