“ரஷ்யாவின் தடுப்பூசி பரிசோதனைகள் குறித்து சந்தேகம் உள்ளது” ஜெர்மனி சுகாதார அமைச்சர் குற்றம்சாட்டு!
உலகை உலுக்கி வரும் கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமீர் புடின் நேற்று அறிவித்தார். தன் மகள்களில் ஒருவருக்கு இத்தடுப்பூசியை செலுத்தியதாகவும், அது சிறப்பாக செயலாற்றுவதாகவும், நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாகவும் கூறினார்.
இரு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு இத்தடுப்பூசியை ரஷ்யா கொண்டு வந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இந்த தடுப்பூசி சந்தைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெர்மன் சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளதாவது: தடுப்பூசியை முதலில் கொண்டு வருவதை விட பாதுகாப்பாக கொண்டு வருவது தான் முக்கியம். கோடிக்கணக்கான மக்களுக்கு விரைவாக ஒரு தடுப்பூசியைப் போடுவதைத் தொடங்குவது ஆபத்தானது. அது தவறாக மாறினால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உயிரிழக்கவும் கூடும்.
ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது. அனைத்து தகவல்களுடன் நல்ல தடுப்பூசி கிடைத்தால் மகிழ்ச்சி தான். ஆனால் ரஷ்யா கண்டறிந்துள்ள தடுப்பூசி குறித்து அதிக தகவல்களை வழங்கவில்லை. அதுதான் அடிப்படை பிரச்சினையாகவுள்ளது. போதுமான அளவும் சோதிக்கப்படவில்லை. தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை வர, முடிவுகளை பொதுவில் வைப்பது மிக முக்கியமானது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
‘கொரோனா தடுப்பூசி விவகாரத்தில், உலக மக்களின் பாதுகாப்பை விட, ரஷ்யா தன் தேசத்தின் கவுரவத்தை முக்கியம் எனக் கருதுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது’ என, மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.