அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்ட ஜெ.தீபா தொடர்ந்த வேதா இல்ல வழக்கு!

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து தீபக் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்காக அண்மையில் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக 68 கோடி ரூபாய் இழப்பீடும் நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபக்கும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்து தீபாவும் உயர் நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்குகளை 2 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தீபக் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபாவின் மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இரு வழக்குகளின் விசாரணையும் அடுத்த வாரம் நடைபெறும் எனக் கூறி ஒத்திவைத்தனர்.