சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகல்!
![](https://thambattam.com/storage/2020/08/jpg-1-780x470.jpg)
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பலகட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பின்பே போட்டி நடைபெறும்.
இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஒரு வாரம் நடைபெறுகிறது. கேப்டன் டோனி ராஞ்சியில் நேற்று முன்தினம் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார். பரிசோதனையில் டோனிக்கு கொரோனா இல்லை என முடிவு வந்தது. இதேபோல் மற்ற வீரர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
![](https://thambattam.com/storage/2020/08/EfXg_kUXkAAIKLf-300x168.jpg)
பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், அம்பத்தி ராயுடு போன்ற இந்திய வீரர்கள் சென்னைக்கு கிளம்பி வருகிறார்கள். வீரர்கள் அனைவரும் சென்னைக்கு வந்ததும் பயிற்சி முகாம் உடனடியாக தொடங்கும். இந்நிலையில் சென்னையில் நடக்கும் பயிற்சி முகாமில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வருகிற 21-ந் தேதி அமீரகத்துக்கு புறப்படும் முன்பாக சென்னை வந்து ரவீந்திர ஜடேஜா அணியினருடன் இணைந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சென்னை சூப்பர் கிங்சின் பயிற்சி முகாமை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த தமிழக அரசு எழுத்துபூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.