“என்னய்யா எழுதியிருக்கீங்க.. ஒன்னுமே புரியல” டாக்டர்களின் கையெழுத்தால் கடுப்பான நீதிபதிகள்!!!
நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துச்சீட்டுகளில் டாக்டர்களின் கையெழுத்துகள் தெளிவாக இல்லாததை சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்துள்ள கட்டாக் உயர் நீதிமன்றம், டாக்டர்கள் தெளிவாக எழுதுவதை உறுதிபடுத்த ஒடிசா மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு குற்ற வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் மனைவி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மனைவியை கவனித்துக்கொள்ள தான் அங்கு செல்லவேண்டும் என்பதால் அதற்காக இடைக்கால ஜாமின் வழங்கக்கோரி கட்டாக் உயர் நீதிமன்றத்தில் அந்த கைதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவுடன் தன் மனைவியின் மருத்துவ ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
எனினும் அந்த ஆவணங்களில் டாக்டர்களின் கையெழுத்து தெளிவாக இல்லாததால் அதை ஆய்வு செய்ய நீதிமன்றம் பெரும் சிரமப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பாணிகிரஹி அந்த கைதிக்கு ஒரு மாத காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து டாக்டர்களின் கையெழுத்து குறித்து அதிருப்தி தெரிவித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துச் சீட்டுகள் மற்றும் அவர்களின் மருத்துவ ஆவணங்களில் டாக்டர்களின் கையெழுத்துகள் புரியவில்லை. இதுபோன்ற தெளிவற்ற மருந்துச்சீட்டுகள் நோயாளிகளின் சிகிச்சையை தாமதப்படுத்தலாம். இது அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரவும் வழிவகுக்கும். எனவே டாக்டர்கள் அனைவரும் நோயாளிகளுக்கு வழங்கும் மருந்துச் சீட்டுகளில் தெளிவாக மருந்துகளை தெளிவான எழுத்தில் குறிப்பிடவேண்டும். இதை உறுதிபடுத்த மாநில அரசு அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.